Sunday 30 November 2014

நம்ம கடலூர்: கடலூர் (Cuddalore)



பெயர்காரணம் : 

கடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதற்கு காரணம் : இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம். 

வரலாறு : 
(விழுப்புரம் மாவட்டத்திற்கு உரிய வரலாறே இம்மாவட்டத்திற்கும் பொருந்தும்).

எல்லைகள் : 

தெற்கே திருச்சிராபள்ளி மாவட்டமும்; தென்கிழக்கே தஞ்சாவூர் மாவட்டமும்; கிழக்கே வங்காள விரிகுடாவும்; மேற்கே விழுப்புரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

நீர்வளம் : 

இம்மாவட்டத்தில் வந்து கலக்கும் ஆறுகளும், பாசனத்துக்கு உதவும் ஆறுகளும் வருமாறு : கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம், மணிமுத்தாறு. 

ஏரிகள் : 

வீராணம் ஏரியால் 18,160 ஹெக்டேர் பாசனப்பரப்பு பயன் பெறுகிறது. வாலாஜாஏரி-4,612 ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது. பெருமாள் ஏரி-2633ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது. திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவஹஂந்திரபுரம் அணை மூலம் 10,000 ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது. 

கனிவளம் : 

இம்மவாட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதி என்பது நாடறிந்த உண்மை. களிமண்வகைகளிலே உயர்ந்த களிமண் காடாம் புலியூருக்கு வடக்கேயும், பண்ணுருட்டி கடலூர்களுக்குத் தெற்கேயும் கிடைக்கின்றன. 

பணிக்கன்குப்பத்தில் பீங்கான் தொழிலுக்கேற்ற வெள்ளைக் களிமண் கிடைக்கிறது. மாமண்டூரில் துத்தநாகம், ஈயம், செம்பு படிவங்கள் இருப்பதாகக் கண்டு படிக்கப்பட்டுள்ளன. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியும் தரமான சைனாக் களிமண்ணும் கிடைக்கின்றன. 

வேளாண்மை : 

சாகுபடி பரப்பு : 2,46,125 ஹெக்டேர். இதில் நெல் சாகுபடியாகும் பரப்பு 1,31,000 ஹெக்டேர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் : 6,33,768 பேர். கொள்ளிடம் பாயும் பகுதிகளில் நெல்லும், பண்ருட்டி வட்டத்தில் பலாபழமும், முந்திரியும் பெருமளவில் விளைகின்றன. மணிலாப்பயிர் விளைச்சல் இம்மாவட்டத்தில் அதிகம் நல்ல எண்ணெய் சத்து உள்ள காரணத்தால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெல்லையடுத்து, நஞ்சையிலும், புஞ்சையிலும் கரும்பு விளைகிறது. இனிப்புச்சத்து அதிகம் உள்ள கரும்புகள் இங்கு உற்பத்தியாகின்றன. புஞ்சை நிலத்தில் கேழ்வரகு, கம்பு, எள், சோளம், துவரை, வரகு விளைகின்றன. கரிசல் மண் உள்ள சில இடங்களில் குறைந்தளவு பருத்தியும் விளைகிறது.


ஆலைகள் :

சர்க்கரை ஆலைகள், கடலூர் வட்டத்தில் நெல்லிக் குப்பம், விருத்தாசலம் வட்டத்தில் பெண்ணாடத்திலும் உள்ளன. கடலூரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் பண்ருட்டி, கடலூர் முதலிய இடங்களில் இரசாயனக் கலவை உரத்தொழிற்சாலைகளும் உள்ளன. 

மின்சார தொழில் : 

வடலூரில் சேஷசாயி இண்டஸ்ட்ரீசார் தயாரிக்கும் ஹெச்.டி மற்றும் எல்.டி இன்சுலேட்டர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. 

கடல் சார்ந்த தொழில்கள் : 

கடலூர் மாவட்டம் சிறப்பான கடற்கரையை பெற்று விளங்குகிறது. இங்கு 14,000 டன்கள் மீன் மற்றும் இறால் வகைகள் பிடிக்கப்படுகின்றன. இங்கு 1 கி.மீ தொலைவில் 234 டன்கள் கிடைக்க வாய்ப்பிருந்தும் 114 டன்கள் மட்டுமே பிடிக்கப்படுகின்றன. கால்வாய்களும், ஆறுகளும் சுமார் 480 கி.மீ நீளத்திற்கு ஓடிய போதிலும் கடலூரும்-பரங்கிப்பேட்டையும் மற்ற மீன்பிடி நிலையங்களை விடச் சிறந்த முறையில் பணியாற்றுகின்றன. 1. மீன் மற்றும் இறால் - 2 சிறிய தொழில் நிலையங்கள் மட்டும் உள்ளன. 

பதனத் தொழிற்சாலை 2. ஐஸ் தயாரிப்பும்-இறைச்சி - மூன்று சிறிய தொழில் நிலையங்கள் கடலூரிலும் பாதுகாத்தல் ஒன்று பரங்கிப் பேட்டையில் உள்ளன. 

சிப்காட் தொழிற்கூடம் : சிதம்பரம்-கடலூர் சாலையில், கடலூர் புதுநகரிலிருந்து 9கி.மீ தொலைவில், சுமார் 460.33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 

வழிபாட்டிடங்கள் : 

சிதம்பரம் : 

Natraj Templeசிதம்பரத்தை 'தில்லை' என்று அழைப்பார்கள் அதற்குக் காரணம் தில்லை மரங்கள் அதிகமாயிருந்தது என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் ஆடவல்லான் (நடராசர்) இருக்கும் சிற்றம்பலம், அதனை அடுத்து எதிரிலுள்ள பொன்னம்பலம், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி கற்சிலையுள்ள நடனசபை, பேரம்பலம், ஆயிரங்கால் மண்டபம் என ஐந்து சபைகள் உள்ளன. சிற்றம்பலத்தின் கூரை 21,600 தங்க ஓடுகளால் ஆனது. நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு (15ஜ்60ஜ்24) 21,600 மூச்சு ஆகிறது. இதுவே தங்க ஓடுகளின் மொத்த எண்ணிக்கை. பொன்னம்பலத்திலிருந்து சிற்றம்பலம் ஏற ஐந்து படிக்கட்டுகள் உண்டு. இவை ஐந்தெழுத்துப் படிகள். ஐந்தெழுத்தின் வழி இறைவனைக் காணலாம். படியின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. இந்த படிகளில் பல சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொண்டதாக வரலாறு கூறுகிறது. திருநடனம் ஐந் தொழில்களைக் குறிக்கும். கூத்தனின் (நடராசர்) இடப்பக்கம் சிகாமசுந்தரி. வலப்பக்கம் 'சிதம்பர ரகசியம்' உள்ளது. இது ஆகாயகத் தலம். இறைவன் வெளியாக இங்கு இருக்கிறான் என்பது ஐதீகம். இதன் அறிகுறியாக ஆகாயத்திற்குப் பல பொன் வில்வ மாலைகள் தொங்க விடப்பட்டுள்ளன. வானளாவ நிற்கும் நான்கு கோபுரங்களும் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பல மன்னர்களின் திருப்பணியைக் கண்ட கோயிலாதலால் இங்கு அவரவர் கால கலை நுட்பங்களைக் காணலாம். நடனக் கலையில் அடவுகள் இங்குள்ளது போல அவ்வளவு அழகாக வேறு எங்கும் காண முடியாது. பிரகார மண்டபங்களில் நாயக்கர் கால ஓலியங்களைக் காணலாம். இங்குச் சிவனையும்-திருமாலையும் ஒருங்கே ஓரிடத்தில் நின்று காணலாம். இப்படி வேறு எவ்வூரிலும் காண இயலாது. கோயில் என்றாலே அது சிதம்பரம் என்பது வழக்கம். 

திருவிழாக்கள் : 

மார்கழித் திருவாதிரை, ஆனி உத்ரம், சித்திரைத் திருவோணத்திலும், ஆவணி, புரட்டாசி, மாசி 14-ஆம் பிறை நாளிலும் நடக்கும் 4 திருமுழுக்குகளும் பொன்னம்பலத்தில் நடைபெறும். 

திருப்பாதிரிப் புலியூர் : 

இறைவன் : தோன்றாத்துணைநாதர், அம்மை : தோகையம்பிகை. கடலூர் புது நகரத்தின் ஓர் அங்கமாகத் திருப்பாதிரிப் புலியூர் உள்ளது. திருப்பாதிரிப் புலியூர் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கில் 1 கி.மீ தொலைவில் பாடலீசுவரர் கோவில் என்கிற பெரிய கோவில் உள்ளது. புலிக்கால் முனிவர் பூசித்ததால் இப்பெயர் பெற்ற தென்பர். அப்பரை கற்றுணில் கட்டிக் கடலில் எறிந்த போது, "சொற்றுணை வேதியன்" என்னும் பதிகம்பாடி,அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவூர் 'கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரில் உள்ளது. வைகாசி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 

திருவயிந்திரபுரம் : 

வைணவத் தலம். பெருமாள்: தேவ நாதர், தாயார்: வைகுந்த நாயகி. திருப்பதியில் உறையும் பெருமாளைச் சின்னவர் என்றும், திருவயிந்திரபுரத்தில் உரையும் தேவநாதப் பெருமாளைப் பெரியவர் என்றும் சொல்வர். திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் இந்த வைணவத் தலம் அமைந்துள்ளது. வேதாந்த தேசிகரால் பாடல் பெற்றத் தலம். ஒவ்வொராண்டும் மார்கழி மாதத்தில் நடைபெறும் " இராப்பத்து பகல்பத்து" உச்சவம், "சொர்க்க வாசல் திறப்பு விழா" சிறப்பாக நடைபெறும். 

திருமாணிக்குழி :

திருவயிந்திரபுரம் கோயிலுக்கு 2 கி.மீ தொலைவில் உள்ளது-இவ்வூர்; இறைவன்-மாணிக்கவரதர்; இறைவி-மாணிக்கவல்லி; ஆண்டவன் முன்பு எப்போதும் திரை இடப்பட்டே இருக்கும். திரையில், பதினொரு உருத்திரர்களுள் ஒருவரான வீமர் என்பாரின் திரு உருவம் மட்டும் எழுதப்பட்டுள்ளது. முதலில் இவருக்கு எல்லாவித பூசையும் நிறைவேற்றப்பட்டு அதன் பிறகே திரை விலக்கப்பட்டு இறை வழிபாடு நடைபெறுகிறது. மாணி என்பது திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும். திருமால் மாணி வடிவம் கொண்டு மாவலியை அழித்தபின், இங்கு வந்து சிவனை வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது. கோயிலில் இலிங்கம் இருக்கும் பகுதி, சிறிது பள்ளமாக இருக்கும். எப்போதும் அங்கே தண்ணீர் சுரந்து கொண்டிருக்கும், எனவே மாணி வழிபட்டக் குழி மாணிக்குழி ஆயிற்று. 

திருத்தினை நகர் : 

புதுச்சத்திரம் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது- இறைவன் பெயர்-சிவக் கொழுந்தீசர். இறைவி-இளம் கொம்பனாள். அதிசயிக்கத்தக்க வகையில் தினை விளைந்த காரணத்தால் 'திருத்தினை நகர்' என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வூரிலுள்ள தாமரைக் குளம்நோய் தீர்க்கும் என்று நம்பப்படுகிறது. 

திருச்சோபுரம் : 

கடலூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரை தியாகவல்லி என்றும் அழைக்கின்றனர். முதல் குலோத்துங்க சோழ மன்னனின் பட்டத்தரசி தியாக வல்லி,திருப்பணி செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. இறைவன்பெயர்: சோபுரநாதர் இறைவி: சோபுர நாயகி. 

திரு அதிகை : 

'அதியரைய மங்கை' என்ற பெயரே 'அதிகை' ஆகிவிட்டது. கெடிலம் ஆற்றின் வடகரையில் பண்ணுருட்டிப் புகை வண்டி நிலையத்துக்குத் தென்கிழக்கில் 1 1/2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எட்டு வீரட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. மகேந்திரவர்மன் இங்கு 'குணதரவீச்சுரம்' என்னும் கோயிலைக் கட்டியுள்ளளான். இறைவன்-அதிகை வீரட்டநாதர், அம்மை-அதிகைநாயகி. இக்கோவிலின் அமைப்பும், சிற்பங்களும் காணத்தக்கவை. 

திருநெல்வாயில் : 

இறைவன் பெயர் : உச்சிநாதர், இறைவி : கனகாம்பிகை. சிவபுரி என்று தற்போது அழைக்கப்படுகிறது. சிதம்பரத்திலிருந்து 2 1/2 கி.மீ தொலைவில் உள்ளது- 

திருக்கழிப்பாலை : 

காரைமேடு எனவும் குறிப்பிடப்பெறும் இவ்வூர் சிவபுரிக்கு அருகில் உள்ளது. இறைவன்: பால் வண்ண நாதர், இறைவி : வேதநாயகி. 

திருவேட்களம் : 

இறைவன்-பாசுபசுதேசுரர், இறைவி-நல்லநாயகி. திருவேட்களம் என்ற ஊரே தற்போது அண்ணாமலை நகர் என்று அழைக்கப்படுகிறது. அர்ச்சுனனுக்கு அம்பு கொடுக்கும் விழா, வைகாசித் திங்கள்-விசாக நாளில் சிறப்பாக நடைபெறுகிறது. 

திருநாரையூர் : 

சிதம்பரத்திற்கு தென் மேற்கே, காட்டு மன்னார்குடி செல்லும் வழியில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. நாரை பூசித்தஊர் என்பது ஐதீகம். மூவர் தேவாரங்களைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, பிறந்து ஊர். அவரால் பூசிக்கப்பட்ட பொல்லாப்பிள்ளையாரும் இங்கு உள்ளது. 

திருக்கடம்பூர் : 

சிதம்பரத்திற்கு மேற்கேயுள்ள காட்டு மன்னார்குடிக்கு 5 கி.மீ தொலைவில் உள்ளது.மேலைக் கடம்பூர் என்றும், கரக்கோவில் என்றும் இத்தலத்திற்குப் பெயர் உண்டு. இங்குக் கருவறை தேர் போன்று அமைந்துள்ளது. இவ்வூருக்கு கிழக்கே 2. கி.மீ தொலைவில் 'கடம்பூர் இளங்கோயில்' உள்ளது. இறைவன்:அமுதகடேசுரர், இறைவி:சோதிமின்னம்மை. 

திருநெல்வாயில் அரத்துறை : பெண்ணாகடம் புகைவண்டி நிலையத்துக்குத் தென்மேற்கே 5 கி.மீ தொலைவில் இது நிவாநதி என்னும் வெள்ளையாற்றின் வடகரையிலுள்ளது. இறைவன்-அரத்துறையப்பர், அம்மை-ஆனந்தநாயகி. 

திருத்துங்கானை மாடம் : 

பெண்ணாகடம் புகைவண்டி நிலையம், விருதாசலத்திக்கு தென்மேற்கில் 18 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோவிலின் விமானம் 'யானையின் முதுகு' போல உள்ளது என்பதால் துங்கானை மாடக் கோயில் வகையைச் சார்ந்தது என்பர். கலிக்கம்ப நாயனார், அச்சுத களப்பாளர் வாழ்ந்தவூர். திருநாவலூர் : 

பண்ணுருட்டி புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே 16 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரை 'திருநாம நல்லூர்' என அழைக்கின்றனர். சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்தது இவ்வூரில்தான். இங்குள்ள வரதராசப் பெருமாள் கோயிலில் நாவல் மரம், சுந்தரமூர்த்தி நாயனார் சிலை முதலியவை காணத்தக்கவை. 

திருமுது குன்றம் : 

இன்று இவ்வூரை விருத்தாசலம் என அழைக்கின்றனர் இது நல்ல தமிழ் பெயரின் வடமொழி ஆக்கம் ஆகும். புகைவண்டி நிலையத்தலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. அருகில்மணிமுத்தாறு ஓடுகிறது. மாடவீதிகள் அழகாக அமைக்கப் பட்டிருக்கின்றன. தேவாரபாடல் பெற்ற தலம், இறைவன் பழமலைநாதர், இறைவி: பெரிய நாயகி. கோவில் சோழர் காலத்தில் திருபணி செய்யப்பட்டுள்ளது. அகன்ற வ்ாயிற்கோபுரத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். 

திருக்கூடலையாற்றுர் : 

விருத்தாசலத்திற்குக் கிழக்கில் 23 கி.மீ தொலைவில் உள்ளது. மணிமுத்தாறு, வெள்ளாறும் கூடும் இடமாதலால் இப்பெயர் பெற்றது. இறைவன்: நெறி காட்டு நாயகர்,இறைவி: புரிகுழலம்பிகை. 

திருவெருக்கத்தம் புலியூர் : 

தற்போது இராசேந்திரப்பட்டினம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. விருத்தாசலத்துக்கு தெற்கே 11 கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன்: திருநீலகண்டேசுரர். இறைவி: நீலமலர்க் கண்ணம்மை. 

திருத்துறையூர் : 

திருத்துறையூர் புகைவண்டி நிலையத்திலிருந்து ஊர் 2 1/2 கி.மீ துரத்தில் உள்ளது.சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கையுடன் தொடர்புள்ள ஊர். இறைவன்: சிட்டகுருநாதர்,இறைவி: பூங்கோதை நாயகி. அருணந்தி சிவாச்சாரியார் கோயிலும், சுந்தரரை தடுத்தாட் கொண்ட பெருமான் கோயிலும், வெளியில் குளத்துக்கருகில் உள்ளன. 

சுற்றுலா தலங்கள் : 

பிச்சாவரம் : 

Pichavaramசிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் பிச்சாவரம் அமைந்துள்ளது. காடுகள் சூழ்ந்த பிச்சாவரம், இம்மாவட்டத்தின் ஓர் அழகு மிக்க சுற்றுலா இடமாகும். கல்கத்தாவி லிருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்தபடியாகச் சுர புன்னை மரங்கள் மண்டிக் கிடக்கும் இடம். சுரபுன்னை போன்ற அரிய மரங்களையும், ஏராளமான மூலிகைகளையும் கொண்ட தீவாக காட்சியளிக்கிறது. இயற்கையழகு உள்ள இடமாதலால் வெளிநாட்டினரை வெகுவாக கவர்கிறது. படகில் ஏறி சுற்றிப்பார்க்கத் தொடங்கினால் இரண்டு பக்கங்களிலும் சுரபுன்னை மரங்கள் மண்டிக்கிடக்கும் இயற்கை அழகை காணலாம். காடு முழுவதும் சுற்றிப் பார்க்க கால்வாய் வசதியாக இருக்கிறது. அரசுபடகுகளும், தனியார் படகுகளும் உள்ளன. இவ்விடம் தனித்தனி தீவுப் பிரதேசம் ஆகையால் பயணிகளுக்குப் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தங்குவதற்கு ஏற்ற பயணியர் விடுதிகள் உண்டு. இதன் அருகில் போர்ச்சுக்கீசியர்களால் உண்டாக்கப்பட்ட போர்டோ நோவா கடல் துறைமுகம் அருகில் கடல் ஆய்வு மையம் ஒன்று உள்ளது. 

கெடிலத்தின் கழிமுகம் : 

கெடிலநதி கடலூருக்கருகில் மூன்று இடங்களில் கடலில் கலக்கிறது. ஆறு கடலோடு கலக்கும் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாகும். கெடிலத்தின் இந்த முகத்துவாரத்தை யொட்டியுள்ள சூழ்நிலை மிகக் கவர்ச்சியும் அழகும் வாய்ந்தது. மாலை வேளையில் மக்கள் இங்கு பொழுது போக்குவதற்கு ஏற்ற சூழல் அமைந்துள்ளது. சென்னை மரினா கடற்கரை போன்று இது நீளமில்லாவிட்டாலும் அகன்ற மணற் பரப்பைக் கொண்டது. சோலைகள் நிறைந்த சூழ்நிலையும், கடலோடு ஆறு கலக்கும் கண்கவர் காட்சியும் இங்கிலாந்து நாட்டில் உள்ள 'கவுண்டி கடற்கரை' போன்றதென்று புகழப்படுகிறது. 

கடலூர் தீவு : 

உப்பனாற்றிற்கும், கடலூக்கும் நடுவில் ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவிற்குக் கிழக்கு எல்லையாகக் கடலூம், வடக்கு எல்லையாகக் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதியும், மேற்கு-தெற்கு எல்லைகளாகக் உப்பனாறும் அமைந்துள்ளன. இந்தக்கழிமுகத் தீவு 'அக்கரை' என அழைக்கப்படுகிறது. இந்த அக்கரைத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத் தோப்பு, கோரி என்றும் மூன்று சிற்றுர்கள் உள்ளன. இந்தத் தீவு சென்று காணத்தக்கதாகும்.போக்குவரத்திற்குப் படகு வசதி உண்டு. 

செயிண்ட் டேவிட் கோட்டை : 

கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதிக்கும், அதன் வடகிளைக்கும் நடுவே, தேவனாம்பட்டினம் என்னும் சிற்றுர் உள்ளது. இந்தத் தேவனாம் பட்டினத் தீவில் கடற்கரையையொட்டி கெடிலத்தின் வடகரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'செயிண்ட் டேவிட் கோட்டையைப் பாழடைந்த நிலையில் இன்றும் காணலாம். கோட்டை உள்ள தீவின் முக்கியத்துவத்தை டச்சுக்காரர்களே முதலில் உணர்ந்தனர். இக்கோட்டை 1683-ஆம் ஆண்டு கட்டப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. 1712-ஆம் ஆண்டு ராஜாதேசிங்கின் தந்தை சாரூப்சிங் இக்கோட்டையை தாக்கினார். 1745-50 வரை பிரஞ்சுக்காரர்கள் 4 முறை தாக்கியிருக்கிறார்கள்.


அண்ணாமலைப் பல்கலைக் கழகம் : 

Annamalai University1920-ஆம் ஆண்டு மீனாட்சிக் கல்லூரியாக இருந்தது. தமிழரின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்ட தமிழ்துறை ஏற்படுத்தப்பட்டது. 1929-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாகஉயர்ந்தது. ராஜா சர்.முத்தையாச் செட்டியாரின் தந்தை அண்ணாமலை செட்டியாரால் உண்டாக்கப்ட்டது. அவர் பெயரில் அமைந்த நகரில் கடற்கரைக்கு 5 கி.மீ தொலைவில் அமைதியான, இயற்கையோடு இயைந்த சூழலில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து 2 பர்லாங் தூரத்தில் இருக்கிறது. இங்கு எல்லாவகையான பாடங்களும் போதிக்கப் படுகிறது. 1,25,000 மேற்பட்ட நூற்களைக் கொண்ட பெரிய நூலகம் இருக்கிறது. இங்குள்ள தமிழ்துறையில் தமிழகத்தின் சிறந்த தமிழறிஞர்கள் அனைவரும் பணியாற்றியுள்ளனர். எ-கா பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சோமசுந்தர பாரதியார், சதாசிவ பண்டாரத்தார், போன்றோர் தமிழிசை விழிப்புணர்விலும், இந்திப் போராட்டத்திலும் பெரும்பங்கு இப்பல்கலைக் கழகம் வகித்தது.

இதன் துணை வேந்தர்களாக இருந்தவர்கள்: வி.எஸ்.சீனுவாசசாஸ்த்திரி, கே.வி.ரெட்டி, எஸ்.ஜி. மணவான இராமானுஜம், ஆர்.கே.சண்முகம் செட்டியார், சி.பி.இராமசாமி ஐயர், டி.எம்.நாராயண சாமிபிள்ளை, எஸ்.வி. சிட்டிபாபு போன்ற பெருமக்கள் ஆவர். 

துறைமுகம் : 

கடலூர் முதுநகரில் உள்ளது. கெடில ஆற்றின் முகத்துவாரத்தில் இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும். இத்துறை முகம் பழமையானது. அந்நிய வாணிபத்தில் சென்னைக்குத் துணையாக உள்ளது. தற்காலம் ஒரு நடுத்தரத் துறைமுகமாக மாற்றப்பட்டு உள்ளது. இரும்புக்கனிகள், எரிபடிவங்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதி. கந்தகம், உரம் உணவு தானியம் ஆகியவை முக்கிய இறக்குமதி. பரங்கிப் பேட்டை இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு துறைமுகம். முன்பு போக்குவரத்து இருந்தது. இன்றும் படகுகள் வந்து போகின்றன. முன்பு உப்பளம் இருந்த இடம் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரணுவியல் ஆராய்ச்சிப்பிரிவு உள்ளது. 

முக்கிய ஊர்கள் : 

நெய்வேலி :  Neyveli

விழுப்புரத்திற்கும்-கடலூருக்கும் இடையில் உள்ளது. 1870-ஆம் ஆண்டிலேயே நெய்வேலியில் நிலக்கரி இருப்பது ஆங்கிலேயருக்குத் தெரியும். 1943-44 ஆண்டுகளில் இங்கு 100 சதுர மைல் பரப்பளவில் ஏறத்தாழ 250 கோடி டன்கள் நிலக்கரி இருப்பதாக மதிப்பிடப்பட்டது. அப்போதெல்லாம் இவ்விடம் பெரும்காடாகக் கிடந்தது. 1953-இல் 145 அடி தோண்டப்பட்டது. நிலத்தடி நீரை வெளியேற்ற ஆரம்பித்தனர். 1961- ஆகஸ்ட் 24ம் நாள் லிக்னைட் படிவம் முதன் முதல் காட்சி தந்தது. நிலக்கரியால் லாபமில்லை என்றதனால் அதை எரித்து அந்த வெப்பசக்தி கொண்டு, மின்விசை உற்பத்தி செய்வதால் லாபம் என உணரப்பட்டு மின்விசை நிலையம் அமைக்கப்பட்டது. 

உரம் : 

ஆண்டுதோறும் 5 இலட்சம் டன் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு உரத்தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. 

பி.அண்டு.சி. ஆலை : 

Briquetting and Corbonisation Plant :

பழுப்பு நிலக்கரியைப் பதப்படுத்தி வீடுகளின் உபயோகத்திற்கான கரியாக அதை மாற்றியமைப்பதைத் தவிர இந்த ஆலையிலிருந்து பெறப்படும் வேறு பொருள்கள்: கரித்தூள், தார், நியூட்ரல் எண்ணெய், கார்பாலிக் அமிலம், பினால், ஆர்த்தோ கிரிசோல், மெட்டா மற்றும் பாராகிரிசோல், சைலினால். 

நெய்வேலி நகரியம் :

இந்நகர் 31 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 10கி.மீ நீளமும், 3கி.மீ அகலமும் கொண்ட இந்நகரில் 10,000 க்கு அதிகமான பணியாளர்கள் வாழ்கின்றனர்.

கடலூர் புதுநகர் : 

சென்னைக்கு நேர் தெற்கே 100 மைல் தொலைவிலுள்ளது. மஞ்சக் குப்பம்,புதுப்பாளையம், தேவனாம்பட்டணம், வில்வராய நத்தம், வன்னியர் பாளையம் முதலிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டது. கெடிலம் ஆறு கடலூர் நகரைச் சுற்றியும், நகருக்கு நடுவேயும் ஓடுகிறது. நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதால் நீதிமன்றம், கல்வி, மருத்துவ நிலையங்கள் அரசு அலுவலகங்கள் இங்குள்ளன. வணிகத் தலமாகவும் இது இருந்து வருகிறது.

பண்ணுருட்டி : 

பலாப்பழம், முந்திரிபழம், முந்திரிக்கொட்டை, முந்திரிப்பயறு, முந்திரி எண்ணெய் போன்றவைகளுக்கு பண்ணுருட்டி பெயர் பெற்றது. மிக முக்கியமான மொத்த சந்தையுள்ள வணிகத்தலம். வடக்குத்துக் கிராமத்தில் பேப்பர் மில் ஒன்று, கங்கா பேப்பர் மில் என இயங்கி வருகிறது.

நெல்லிக்குப்பம் : 

முஸ்லீம்கள் நிறைந்த ஊர். இங்கு ஈ.ஐ.டிபாரி நிறுவனத்தாரால் நடத்தப்படும் சர்க்கரை ஆலை ஒன்றும், மிட்டாய் தொழிற்சாலையும் உள்ளன. கரும்பு உற்பத்தி இவ்வட்டத்தில் அதிகம். அதுபோல வெற்றிலை, அகத்திக்கீரை, அவுரிஎண்ணெய் முதலியவை இங்குப் பெயர் பெற்றவை.

பரூர் : 

விருத்தாசலத்திற்கு வடமேற்கில் உள்ளது இவ்வூர். இங்குள்ள சர்சில் மாதாவின் சிலையும், கிறிஸ்துவின் சிலையும் மணிலாவிலிருந்து வரவழைக்கப்பட்டவை. இவை மரத்தாலானவை. சிறப்பாக வண்ணம் தீட்டப்பெற்றவை, அதில் இந்திய அணிகலன்கள் இருப்பது சிறப்பு.

வடலூர் : 

Vadalurகடலூர்-விருத்தாசலம் சாலையில் வடலூர் உள்ளது. வடலூர் என்றாலே இராமலிங்கசுவாமிகளின் நினைவுதான் யாருக்கும் வரும். அங்கே சத்திய ஞான சபை,தாமரை வடிவில் எண்கோண முடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி ஒளி வடிவாய்க் காணும் 'ஒளி வழிபாடு' நடைபெற்று வருகிறது. இங்கு தைப்பூசத்தில் மிகப் பெரிய விழா நடைபெறுகிறது. வடலூருக்கு அருகில் மேட்டுக்குப்பத்தில் அடிகள் தங்கியிருந்த மனைக்குச் 'சித்திவளாகம்' என்பது பெயர்.

புகழ்பெற்ற பெருமக்கள் :

அப்பர், சுந்தரர், சந்தான குரவர்கள் நால்வர், அருணந்தி சிவாச்சாரியார்,மனவாசகம் கடந்தார், வேதாந்த தேசிகர், அருட்பெரும் ஜோதி இராமலிங்கர், திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள். கடலூர் சுப்பராயலுரெட்டியார், தெய்வநாயகம் அய்யா, கனகசபை பிள்ளை, தங்கராஜ் முதலியார், வழக்கறிஞர் இளம் வழுதி, கல்வி வள்ளல் ஏ.ஆர். தாமோர முதலியார், பண்ணுருட்டி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, கடலூர்-விடுதலை கி.வீரமணி, ரெவரண்டு ஞானப்பிரகாசம், ரெவரெண்டு மரியதாஸ், விருத்தாசலம் பூவராகன், தி.கி.நாராயணசாமி நாயுடு முதலியோர்.

No comments:

Post a Comment