Tuesday 16 December 2014

நம்ம கடலூர் - விடுதலைப் போராட்ட தியாகி கடலூர் அஞ்சலையம்மாள்:

கடலூர் முது நகரில் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38ஆம் எண் இல்லத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த அஞ்சலையம்மாள் திண்ணைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். 


பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெணமணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே அஞ்சலையம்மாளின் பொது வாழ்க்கைத் தொடங்கி விட்டது. 1927 ஆம் ஆண்டு நீலன் சிலையகற்றும் போராட்டம், 1930-உப்பு சத்தியாகிரகப்போர், 1933-கள்ளுக் கடை மறியல், 1940- தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு கடலுர், திருச்சி வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் நானகரை ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றவர். குறிப்பாக வேலுர் பெண்கள் சிறை அவர் அடிக்கடி சென்று வந்த சிறையாகும். 1932 ஆம் ஆண்டு வேலுர் பெண்கள் சிறையில் 727 ஆம் எண் கைதியாக அஞ்சலையம்மாள் இருந்த போது அவர் நிறை மாத கர்ப்பிணி, சிறையிலேயே குழந்தை பிறந்துவிடுமென்பதால் அவரை வெளியில் அனுப்பி குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைத்தனர். அதனால் சிறையில் குழந்தை பிறந்ததற்கான எவ்வித ஆவணமும் இல்லை.

அப்போது பிறந்தவர்தான் ஜெயவீரன் இன்றும் கடலூர் முதுநகரில் சின்னஞ்சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள நற்குணம் என்ற சிற்றூரில் முருகப்படையாட்சி என்பவரை அஞ்சலையம்மாள் திருமணம் செய்து கொண்டார். அஞ்சலையம்மாளின் அரசியல் பணிக்கு உறுதுணையாகக் கணவரும் கடலுரிலேயே தங்கி விடுதலைப் போரில் பங்கேற்று அவரும் பல முறை சிறை சென்றுள்ளார் இவர்களின் மூத்த மகள் அம்மாப்பொண்ணு ஒன்பது வயதிலேயே நீலன் சிலையகற்றும் போரில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அவரை காந்தியடிகள் வார்தாவுக்கு அழைத்துச் சென்று லீலாவதி எனப் பெயர் சூட்டி சபர்மதி ஆசிரமத்தில் வளர்த்தார். அங்கு செவிலியர் படிப்பை முடித்து சென்னை வந்ததும் தன்னைப்போலவே இளம் வயதில் விடுதலைப் போரில் ஈடுபட்ட பன்மொழிப் புலவர் ஜமதக்னியைத் திருமணம் செய்து கொண்டார். காங்கிரஸ் வளர்ச்சிக்கும் அஞ்சலையம்மாள் அரும்பாடு பட்டுள்ளார். கடலூரில் அஞ்சலையம்மாளின் இல்லம் எப்போதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்த வண்ணமிருக்குமாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்காக செலவிட்டிருக்கிறார். கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது நல்ல உள்ளம் கொண்ட சிலர் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலையம்மாள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.

1946 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. "கதர் என்று மகாத்மா கொண்டு வந்தார், கிராமங்களில் நூற்றால் ஒரு சிட்டம் இரண்டரை அணா விற்கிறது. இதை நாம் பலப்படுத்திட பஞ்சு வெளியில் போகாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டுமென்று அரசாங்கத்திலே சட்டம் இயற்றி விட்டால் துணி பஞ்சமில்லாமல் கவுரவமாய் இருப்போம்... கிராமத்தில் பயிரிடுவோர் காலையில் எழுந்து வயலுக்குப் போய்விடுவார்கள். பத்து மணிக்கு அவர்களுக்கு சோறு கொண்டு போவார்கள், அதைச் சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வருவார்கள். நாம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மருத்துவரிடம் செல்கிறோம். அவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டு இரண்டு கோட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" .(சட்டமன்ற அவைக்குறிபு தொகுதி-1,பக்.317,மே,ஜூன்-1946) ஏழைப் பணக்காரர் நிலையை ஒப்பிட்டு பேசியது அவரின் பொது உடைமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. உழவு, நெசவு ஆகிய இரு தொழில்களையும் அவர் குடும்பத்தினர் செய்துள்ளனர். இருப்பினும் நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாகச்செய்துள்ளனர். இவர் கணவர் முருகப்படையாட்சி 1932 ஆம் ஆண்டு கடலுர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவருக்கு வயது 56 தொழில் நெசவு என்று சிறைப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அஞ்சலையம்மாளும் அவர் கணவர் முருகப்படையாட்சியும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தறி நெசவு செய்து நீண்டநாள் கட்சிப்பணி செய்துள்ளனர். நெசவு செய்த கைத்தறி துணிகளைச் சுமந்து கொண்டு தந்தைப் பெரியாரோடு சென்று சிற்றூர்களில் விற்றுள்ளனர். அன்றைய தென்னார்க்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றியுள்ளார். அப்போது அவரின் முயற்சியால் தான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ் கதிர் கருவி கொண்டுவரப் பட்டுள்ளது. ஒரு முறை கடலூருக்கு காந்தியடிகள் வந்த போது அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு மாறு வேடத்தில் காந்தியடிகளை குதிரை வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார். அதனால் காந்தியடிகள் அஞ்சலையம்மாளை தென்னாட்டின் ஜான்ஸிராணி என அழைத்தாராம். பண்ணுருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் நல்ல குடி நீர் கிடைக்காமல் மக்கள் நரம்பு சிலந்தி நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அத்தகைய சிற்றூர்களில் அஞ்சலையம்மாள் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார். வீராணம் ஏரியிலிருந்து புவன கிரிக்கு பாசன நீர் செல்லும் பெரிய வாய்க்காலில் ஒரு கிளை வாய்க்காலை ஏற்படுத்தி தீர்த்தாம்பாளையம் என்ற சிற்றூருக்கு பாசன வசதி செய்தார் அவ்வாய்க்கால் இன்றும் அஞ்சலை வாய்க்கால் என்றே குறிப்பிடப் படுகிறது. பெண் என்பவள் சமைக்கப் பிறந்தவள் என்னும் ஆணாதிக்கப் பொதுப் புத்தியின் வெளிப்பாடுதான் இது.

1921இல் காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அஞ்சலையம்மாளும் தீவிரமாகச் செயல்பட்டார். நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல், தனிநபர் சத்தியாகிரகம் உள்பட பல போராட்டங்களில் பல மாதங்கள் சிறையில் கழித்திருக்கிறார். 1921 முதல் 1943 வரை 22 ஆண்டுகளில் நான்கரை ஆண்டுகள் சிறையிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது. அஞ்சலையம்மாளின் மூத்த மகள் அம்மாக்கண்ணு. நீலன் சிலையகற்றும் போராட்டத்தில் அம்மாவுடன் கலந்துகொண்டு சிறை சென்றார். தண்டனை முடிந்த பிறகு, 9 வயதான அம்மாக்கண்ணை காந்தியார் அழைத்துச் சென்றார். லீலாவதி என்று பெயர் சூட்டினார். தன்னுடைய ஆசிரமத்திலேயே வளர்த்தார்.

கடலூரில் ஒருமுறை அஞ்சலையம்மாளைச் சந்திக்க விரும்பினார் காந்தியார். சந்திக்க தடை இருந்ததால், பர்தா அணிந்து சென்று, காந்தியாரைச் சந்தித்தார் அஞ்சலை யம்மாள். அவரை, தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டினார் காந்தியார். 1932இல் வேலூர் பெண்கள் சிறையில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார் அஞ்சலையம்மாள். சிறையில் குழந்தை பிறப்பதைத் தடுக்கும் விதத்தில் வெளியே அனுப்பினர். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சிறையில் அடைத்தனர்.

எப்பொழுதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந் திருக்கும் அஞ்சலையம்மாளின் வீடு. வருகிறவர்களுக் கெல்லாம் தன்னால் முடிந்த உணவைக் கொடுத்து உபசரிப்பார். வீட்டையே அடமானம் வைத்து கட்சிப் பணி செய்திருக்கிறார். சட்டமன்றத்துக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காகப் பணியாற்றியிருக்கிறார். பண்ருட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.

வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்குப் பாசன நீர் செல்லும் வாய்க்காலில் இருந்து ஒரு வாய்க்காலை தீர்த்தாம்பாளையம் நோக்கித் திருப்பிவிட்டார். இதனால் அங்கு தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்தது. இது அஞ்சலை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.

Saturday 6 December 2014

நம்ம கடலூர் - சிதம்பரம் நடராசர் கோயில்:

சிதம்பரம் நடராசர் கோயில்:


நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.

இத்தலத்தின் மூலவர் திருமூலநாதர், தாயார் உமையாம்பிகை (சமஸ்கிருதம்:சிவகாமசுந்தரி). இத்தலத்தின் தலவிருட்சமாக தில்லை மரமும், தீர்த்தமாக சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன. இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகும். இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது. முன்னைக் காலங்களிலே இத்தலம் சேர, சோழ பாண்டிய, பல்லவ, விஜய நகர அரசுகளாலே புனரமைக்கப்பட்டு வந்துள்ளதோடு மட்டுமன்றி இவ்வரசுகளிடமிருந்து இத்தலத்திற்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் திருமூலராலும், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது. 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும்.

Wednesday 3 December 2014

நம்ம கடலூர் - பிச்சாவரம்:

பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது.பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது. இவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.


பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வலசையாக வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான (சிற்றினங்கள்) பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.