Sunday 13 December 2015

கடலூர் அரசு மருத்துவமனை வரலாறு:


கடலூர் அரசு மருத்துவமனையானது, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மருத்துவமனையாகும். 1907-ல் சுப்பராயலு ரெட்டியார் அவர்கள், இந்த மருத்துவமனையில் வேலை செய்வதற்காக பாரிஸில்(பிரான்ஸ்) இருந்து இரண்டு பயிற்சி செவிலியர்கள் வரவழைத்திருக்கிறார். 1911-ல், அப்போதைய மாநில ஆளுநர் சர். ஆர்த்துவாலே (Sir Arthuvale) மருத்துவமனைக்கு வருகைபுரிந்து அதன் செயல்பாட்டை பாராட்டியுள்ளார். 



பின்னர் 1918-ல் கலெக்டர் லாங்கர் பரிந்துரையின் பேரில், மேலும் இரண்டு பயிற்சி செவிலியர்கள் கொண்டு தாய்மை சேவை, பொது மருத்துவ சேவை, அறுவை சிகிச்சை சேவை போன்றவை தொடங்கப்பட்டு  பொது மருத்துவமனை (Govt. Hospital) என மாற்றப்பட்டுள்ளது. 


வெறும் நான்கு செவிலியர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட மருத்துவமனையானது, தற்போது கடலூர் மக்களின் சுகாதார வாழ்விற்கு துணை நிற்பதாக செயல்பட்டு வருகிறது.

தமிழாக்கம்: Nadarajan V.

உதவி & நன்றி: கடலூர் மாவட்ட இணையதளம்

Regards,
நம்ம கடலூர்(Our Cuddalore)

Thursday 27 August 2015

நம்ம கடலூர்(Our Cuddalore): வெலிங்டன் ஏரி

வெலிங்டன் ஏரி (அ) எமினேரி என்பது தமிழகத்தின் கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு அருகே கீழ்ச்செருவாய் என்னும் கிராமத்தில் உள்ள ஓர் ஏரி. இது கடலூர் மாவட்டத்தில் உள்ள 25,000 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது.


திட்டக்குடி-திருச்சி முக்கியச்சாலையில் கீச்செருவாய் அமைந்துள்ளது. கீழ்ச்செருவாயில் வெலிங்டன் நீர்த் தேக்கம் , 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. வெலிங்டன் ஏரி என்றிருந்தாலும் கூட, பரவலாக "எமினேரி" என்று அழைக்கப்டுகிறது. உருவான போது, மொத்த கொள்ளளவாக 31 அடி இருந்தது. பல ஆண்டுக்குப் பின்னர் ஏரியின் உயரம் 32 அடியாக உள்ளது. அண்மையில் ஏரியின் கரை 300 மீட்டர் நீளத்துக்கு தொடர்ந்து பூமிக்குள் அழுந்திக் கொண்டு இருந்ததால், பலவீனப்பட்டு வந்தது. அதனால், ரூ. 30 கோடி செலவிட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. சீரமைப்புக்குப் பின்னர், மொத்த கொள்ளளவு 29.4 அடிதான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மழை பெய்தால் வெள்ளாற்று வழியாக தொழுதூர் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரும். அங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீர் குறிப்பிட்ட அடி உயர்ந்ததும், அங்கிருந்து வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஏரியானது, மேல்மட்டக் கால்வாய், கீழ் மட்டக் கால்வாய் என இரண்டு பகுதிகளாகப் பிரித்து விவசாயத்திற்கு நீர் வழக்கப்படுகிறது. கீழ்மட்டக் கால்வாய் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் அடையும். . நீர்ப்பாசனத்திற்கு மட்டுமின்றி, மீன் வளர்ப்புக்காகவும் இந்த ஏரி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

Regards,
நம்ம கடலூர்(Our Cuddalore):

Friday 14 August 2015

நம்ம கடலூர்(Our Cuddalore): வீராணம் ஏரி

வீராணம் ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் அருகில் உள்ள நகரம் காட்டுமன்னார்கோயில். வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. இது கி. பி. 1011 முதல் 1037 வரை சோழர்கள் காலத்தில் வெட்டிய ஏரியாகும். இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும்.


காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது. வீராணம் ஏரி சென்னையிலிருந்து 235 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வேரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர 1968 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு தாள் ஒன்றுக்கு 180 மில்லியன் இலிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004 இல் நிறைவடைந்தது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் இவ்வேரியின் கரையில் இருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரி 'வீரநாராயண ஏரி' என குறிப்பிடப்பட்டிருக்கும்.


Regards,
நம்ம கடலூர்(Our Cuddalore):

Tuesday 16 June 2015

நம்ம கடலூர்(Our Cuddalore): வீராணம் ஏரி

வீராணம் வந்த வரலாறு:


வீரநாராயணபுரம் என்ற விண்ணகர்- இதுதான் காட்டுமன்னார்கோவிலின் முந்தைய பெயர். கி.பி. 907-ல் சோழநாடு பராந்தக சோழனின் ஆளுகையில் இருந்தபோது, விவசாயத்துக்கு நீராதாரம் இல்லை என்று வீரநாராயணபுரத்து மக்கள் மன்னனிடம் முறையிட்டனர். இதையடுத்து, பராந்தக சோழன் தனது சேனைகளைக் கொண்டு வீரநாராயணபுரத்தில் பிரம்மாண்ட ஏரியை வெட்டி, அதற்கு தனது இஷ்ட தெய்வமான வீரநாராயணப் பெருமாளின் பெயரையே சூட்டி (வீரநாராயணபுரம் ஏரி), ஏரியை பெருமாளின் சொத்தாகவும் அறிவித்தான். கி.பி. 907- கி.பி. 935 காலத்தில் ஏரி வெட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

44,856 ஏக்கர் பாசனம்:

வீராணம் ஏரியின் மொத்த நீர்ப் பரப்பு பகுதி 38.65 சதுர கி.மீ. கொள்ளளவு 1.455 டிஎம்சி. ஏரியின் கீழ்ப் புறத்தில் உள்ள 28 பாசன வாய்க்கால்கள், மேல் புறத்தில் உள்ள 6 பாசன வாய்க்கால்கள் மூலம் தற்போது மொத்தம் 44,856 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஏரி மூலம் 18 ஆயிரம் ஏக்கரில் இருபோக விவசாயமும், 1,150 ஏக்கரில் குள்ளக்கார் பருவ விவசாயமும், 550 ஏக்கரில் வெற்றிலை விவசாயமும் நடைபெற்ற காலமும் உண்டு. ஆனால், 1975-ல் காவிரி தாவா ஏற்பட்ட பிறகு இங்கே இருபோக விவசாயம் இல்லாமலே போய்விட்டது.

நீர்ப் பிடிப்பு பகுதிகளும், தடுப்பணைகளும்:

தொடக்கத்தில், இப்போதைய அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 427.35 சதுர கி.மீ. பகுதிதான் வீராணம் ஏரியின் பிரதான நீர் சேகரப் பகுதியாக இருந்தது. இந்த மாவட்டங்களிலிருந்து ஓடி வரும் மழைநீர், செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை ஆகிய வாய்க்கால்களில் வழிந்தோடி வந்து வீராணத்தை நிரப்பியது. கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கிய ராஜேந்திர சோழன், கங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக வெட்டிய சோழகங்கம் என்ற ஏரியிலிருந்து (தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது) மழைக் காலங்களில் உபரியாக வெளியேறும் தண்ணீரும் கருவாட்டு ஓடை, வடவாறு ஆகியவற்றின் வழியாக வீராணத்தை வந்தடைகிறது.

மேட்டூர் அணைக்கு முன்பே கட்டப்பட்ட கீழணை:

தமிழகத்தில் முக்கிய நீராதாரங்களை உருவாக்கியதில் பென்னி குயிக் போன்ற ஆங்கிலேயப் பொறியாளர்களின் பங்கு போற்றுதலுக்குரியது. அவரைப் போலத்தான் பொறியாளர் சர் ஆர்தர் காட்டனும்.
குடகிலிருந்து காவிரியில் திரண்டு வரும் தண்ணீரைத் தேக்கிவைக்க 1836-ல் திருச்சி முக்கொம்பு அருகே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையை (மேலணை) ஆர்தர் காட்டன் கட்டினார். பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை கிராமத்தில் கீழணையையும் கட்டினார். (அதன் பிறகுதான் மேட்டூர் அணை கட்டப்பட்டது). கீழணை கட்டப்பட்ட பிறகு வீராணம் ஏரியின் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, காவிரித் தண்ணீரும் வீராணத்துக்கு வரத் தொடங்கியது.

வீராணத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் வடவாறு:


கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழணையிலிருந்து வடக்கு ராஜன் கால்வாய், தெற்கு ராஜன் கால்வாய் மற்றும் வடவாறு ஆகிய 3 கால்வாய்கள் பிரிகின்றன. வடக்கு ராஜன் கால்வாய் வழியாக பாயும் தண்ணீர், கடலூர் மாவட்ட பாசனத்துக்கும், தெற்கு ராஜன் கால்வாய் வழியாக பாயும் தண்ணீர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பாசனத்துக்கும் பயன்படுகிறது. வடவாறு வழியாக 22 கி.மீ. பயணிக்கும் தண்ணீர், வீராணம் ஏரியின் தெற்கு எல்லையில் ஏரியை வந்தடைகிறது.

நீர்மட்டம் காட்டும் ஜலகண்டீஸ்வரர்:


வீராணம் ஏரியின் தெற்குமுனை லால்பேட்டை பகுதியில் இருக்கிறது. ஏரி முழுக் கொள்ளளவை தாண்டும்போது, தண்ணீரை வெள்ளியங்கால் வாய்க்காலில் வெளியேற்றுவதற்காக 14 மதகுகள் அமைத்துள்ளனர்.
ஏரியின் நீர்மட்டத்தை அறிவதற்காக இந்த மதகுகள் இருக்கும் பகுதியில் ஜலகண்டீஸ்வரர் சிலையை புடைப்புச் சிலையாக நிறுவியுள்ளனர். வடக்கு திசையில் ஏரியை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிலையின் கழுத்துப் பகுதிக்கு மேலே தண்ணீர் உயர்ந்தால் ஏரி முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதாக கணிக்கப்பட்டிருக் கிறது. இப்போதும் இந்த அளவீடு மிகத் துல்லியமாக உள்ளது. அதேபோல, ஏரியின் வடக்கு எல்லையில் உள்ள புதிய பாசன வடிகால்வாயில் 3 மதகுகள் உள்ளன. இதன் வழியாக பாசனத்துக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 2,550 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட முடியும்.

நம்ம கடலூர் மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றான வீராணம் ஏரியின் பெருமையை அனைவரும் அறிந்துகொள்ள... 
பகிர்ந்து கொள்வோம்!

முந்தைய பதிவை காண: http://nammacuddalore.blogspot.com/2015/06/our-cuddalore.html