Thursday 27 August 2015

நம்ம கடலூர்(Our Cuddalore): வெலிங்டன் ஏரி

வெலிங்டன் ஏரி (அ) எமினேரி என்பது தமிழகத்தின் கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு அருகே கீழ்ச்செருவாய் என்னும் கிராமத்தில் உள்ள ஓர் ஏரி. இது கடலூர் மாவட்டத்தில் உள்ள 25,000 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது.


திட்டக்குடி-திருச்சி முக்கியச்சாலையில் கீச்செருவாய் அமைந்துள்ளது. கீழ்ச்செருவாயில் வெலிங்டன் நீர்த் தேக்கம் , 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. வெலிங்டன் ஏரி என்றிருந்தாலும் கூட, பரவலாக "எமினேரி" என்று அழைக்கப்டுகிறது. உருவான போது, மொத்த கொள்ளளவாக 31 அடி இருந்தது. பல ஆண்டுக்குப் பின்னர் ஏரியின் உயரம் 32 அடியாக உள்ளது. அண்மையில் ஏரியின் கரை 300 மீட்டர் நீளத்துக்கு தொடர்ந்து பூமிக்குள் அழுந்திக் கொண்டு இருந்ததால், பலவீனப்பட்டு வந்தது. அதனால், ரூ. 30 கோடி செலவிட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. சீரமைப்புக்குப் பின்னர், மொத்த கொள்ளளவு 29.4 அடிதான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மழை பெய்தால் வெள்ளாற்று வழியாக தொழுதூர் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரும். அங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீர் குறிப்பிட்ட அடி உயர்ந்ததும், அங்கிருந்து வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஏரியானது, மேல்மட்டக் கால்வாய், கீழ் மட்டக் கால்வாய் என இரண்டு பகுதிகளாகப் பிரித்து விவசாயத்திற்கு நீர் வழக்கப்படுகிறது. கீழ்மட்டக் கால்வாய் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் அடையும். . நீர்ப்பாசனத்திற்கு மட்டுமின்றி, மீன் வளர்ப்புக்காகவும் இந்த ஏரி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

Regards,
நம்ம கடலூர்(Our Cuddalore):

Friday 14 August 2015

நம்ம கடலூர்(Our Cuddalore): வீராணம் ஏரி

வீராணம் ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் அருகில் உள்ள நகரம் காட்டுமன்னார்கோயில். வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. இது கி. பி. 1011 முதல் 1037 வரை சோழர்கள் காலத்தில் வெட்டிய ஏரியாகும். இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும்.


காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது. வீராணம் ஏரி சென்னையிலிருந்து 235 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வேரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர 1968 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு தாள் ஒன்றுக்கு 180 மில்லியன் இலிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004 இல் நிறைவடைந்தது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் இவ்வேரியின் கரையில் இருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரி 'வீரநாராயண ஏரி' என குறிப்பிடப்பட்டிருக்கும்.


Regards,
நம்ம கடலூர்(Our Cuddalore):